×

கடலாடி பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு நயினார் நாகேந்திரன் வாக்குறுதி

சாயல்குடி, ஏப். 14: கடலாடி, சாயல்குடி பகுதிக்கு நிரந்தரமாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக வேட்பாளர் நயினார்நாகேந்திரன் தெரிவித்தார்.ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பாக பாஜக வேட்பாளர் நயினார்நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று கடலாடி பகுதியில் வாக்குகளை சேகரித்தார். பிரச்சாரத்திற்கு அமைச்சர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் முனியசாமிபாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
15க்கும் மேற்பட்ட ஊர்களில் பிரச்சாரம் செய்த நயினார் நாகேந்திரம் பேசும்போது, குதிரைமொழி கடல்நீரை நன்னீராக்கும் திட்டப்பணிகள் துவங்கப்பட்டு, விரைவாக நிறைவேற்றப்படும். இதனால் கடலாடி தாலுகாவிலுள்ள குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். மூக்கையூர் துறைமுகம் பணிகள் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு மீன்பிடி சாதனங்கள் வழங்கப்படும். பனைமரத்தொழிலுக்கென தொழிற்கூடங்கள் அமைக்கப்படும். மலட்டாறு, கஞ்சப்பட்டிஓடை, சங்கரதேவன் கால்வாய்கள் தூர்வாரப்படும். கூடுதலாக தடுப்பணைகள் கட்டப்படும். கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும். கடலாடி பகுதியில் அமைய உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ராமேஸ்வரத்திலிருந்து கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு ரயில் போக்குவரத்து செய்து தரப்படும் என்றார்.

Tags : Nagendra ,area ,Kataladi ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...